Friday, April 1, 2011

2011 உலகக் கிண்ணத்தை ஜெயிக்கப் போவது யாரு?












 பதின்நான்கு நாடுகள் பங்கேற்க, ஆங்கில காலணித்துவத்தின் கீழிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கட் ரசிகர்கள் காத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது 10 ஆவது உலககிண்ண கிரிக்கட் போட்டிகள். கிரிக்கட் பற்றி பேசுபவர்களும், கிரிக்கட் பற்றி எழுதும் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களும், கிரிக்கட் சூதாட்ட இணையதளங்களும் இப்போது பேசும் or அலசும் முக்கியமான விடயம் எந்த அணி 2011 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்பதுதான். அந்த வகையில் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பதை பற்றிய பார்வைதான் இப்பதிவு.



லீக் ஆட்டங்கள் (குறிப்பிட்ட ஒருபிரிவில் இருக்கும் ஒரு அணி ஏனைய அனைத்து அணிகளுடனும் மோதும்) இடம்பெறும் எந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியாக இருந்தாலும் எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று கேட்டால் அதற்க்கு ஒரு அணியின் பெயரை சொல்வதென்பது ஒரு குறிப்பிட்ட அணியின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கை or அச்சத்தின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதேநேரம் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளில் இருந்து முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் என்று நினைக்கும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு அவற்றிலிருந்து ஏதாவதொரு அணிதான் கிண்ணத்தை கைப்பற்றும் என்று கூறுவது ஓரளவு ஊகிக்கக் கூடிய விடயமாக இருக்கும். அவ்வாறு ஊகம் கூறும் சந்தர்ப்பங்களில் நான்கில் இரண்டு அணியாவது அரையிறுதிக்கும் ; அவற்றில் ஒரு அணியாவது இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.


மேற்குறிப்பிட்டது போல லீக் ஆட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் நான்கு அணிகளை தெரிவு செய்வதற்கு ஏதுவாக போட்டி அட்டவணைகள் icc யினால் அறிமுகப் படுத்தப்பட்டது 1999 உலக கிண்ண
போட்டிகளில்தான். A பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள், B பிரிவில் 6 அணிகளில் 3 அணிகள் என முதலில் இடம்பெற்ற லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 6 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு அதாவது SUPER 6 போட்டிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டு அவற்றில் இருந்து முதல் நான்கு புள்ளிகளை பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
A பிரிவில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாவே, கென்யா ஆகிய ஆறு அணிகளில் இருந்து தென்னாபிரிக்கா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்றன. பின்னர் SUPER 6 போட்டிகளில் இடம்பெற்ற லீக் ஆட்டங்களில் முதல் நான்கு இடங்களை பெற்ற பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா பாகிஸ்தானை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.


இந்த சுற்றுப்போட்டியில் முதல் சுற்றில் சிம்பாவே அணி இலங்கை மற்றும் இங்கிலாந்தை பின்தள்ளிவிட்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும், SUPER 6 போட்டிகளில் இந்தியாவை பின்தள்ளிவிட்டு நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிகழ்வும் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் முன்னரே எதிர்வு கூறப்பட்ட பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன.

2003 உலககிண்ண போட்டிகளில் A பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே, இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா, இந்தியா, சிம்பாவே அணிகளும்; B பிரிவில் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், கென்யா, பங்களாதேஷ், நியூசிலாந்து, கனடா அணிகளில் இருந்து இலங்கை, கென்யா, நியூசிலாந்து அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு தகுதிபெற்று அவற்றில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, கென்யா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பின்னர் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.


இந்த சுற்றுப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி SUPER 6 போட்டிகளுக்கு தகுதி பெறாததும்; சிம்பாவே மற்றும் கென்யா அணிகள் SUPER 6 போட்டிகளுக்கு முன்னேறியது எதிர்பாராத விடயங்களாக அமைந்தன. சிம்பாவே பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தடைப்பட்டதாலும் இங்கிலாந்து அணி சிம்பாவே செல்லாததும் சிம்பாவே அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக காரணமான அதேவேளை; இலங்கையுடன் கிடைத்த எதிர்பாராத வெற்றியும் நியூசிலாந்து அணி கென்யா செல்லாமையும் கென்யாவை SUPER 6 போட்டிகளுக்கு கொண்டு சென்றது.

2003 உலகக் கிண்ண போட்டிகளில் ஒரே குழுவிலிருந்து SUPER 6 போட்டிகளுக்கு சென்ற அணிகளுக்கு SUPER 6 லீக் ஆட்டங்களில் போட்டிகள் இடம்பெறாமல் முன்னைய லீக் போட்டிகளில் பெறப்பட்ட புள்ளிகளே சேர்க்கப்பட்டதனால் இலங்கையுடன் முன்னைய சுற்றில் கிடைத்த புள்ளிகளும், நியூசிலாந்து அணி கென்யா செல்லாத காரணத்தால் கிடைத்த புள்ளிகளும், கூடவே SUPER 6 போட்டிகளில் சிம்பாவே அணியுடனான வெற்றியால் கிடைத்த புள்ளிகளும் சேர்ந்து கென்யா அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றன.


2007 உலகக் கிண்ண போட்டிகளில் A,B,C,D என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் ஒரு பிரிவில் இருந்து 2 அணிகள் SUPER 8 போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டன. A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து அணிகளில் இருந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவும்; B பிரிவில் இலங்கை, இந்தியா, பெர்முடா, பங்களாதேஷ் அணிகளில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும்; C பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா அணிகளில் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும்; D பிரிவில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, சிம்பாவே அணிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளும் SUPER 8 போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்தன.

பின்னர் SUPER 8 போட்டிகளில் அதிகப்புள்ளிகளை பெற்ற அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி பின்னர் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இந்த உலக கிண்ண போட்டிகளில் மிகப்பெரும் அதிர்ச்சியாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தாலும்; பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.


இப்படியாக 1999 - 2007 வரையான உலக கிண்ண போட்டிகளில் SUPER 8 or 6 போட்டிகள் இடம்பெற்றமையால் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளை ஓரளவு எதிர்வு கூறக் கூடியவாறு இருந்தது, அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளில் மூன்று அல்லது இரண்டு அணிகளாவது அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன. ஆனால் இதற்க்கு முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் 1992 இல் இடம்பெற்ற போட்டித்தொடர் தவிர்ந்த ஏனைய எந்த தொடரிலும் அனைத்து முன்னணி அணிகளையும் சந்திக்கும் லீக் ஆட்டம் இடம்பெறவில்லை.

1992 இல் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடரில் முக்கிய அணிகள் அனைத்தும் ஒன்றையொன்று சந்திக்கும் லீக் ஆட்ட முறையில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து அதிக புள்ளிகளை பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டன. ஒரே குழுவில் இடம்பெற்ற 9 அணிகளும் இதர 8 அணிகளுடனும் மோதியதில் அதிக புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.


அதற்க்கு முன்னர் 1975 - 1987 வரையான நான்கு உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் A,B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் உள்ள நான்கு அணிகளும் தமக்குள்ள மோதி முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவு செய்வது வழக்கம். இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித்தொடர் (4 போட்டித்தொடர்கள்) ஒவ்வொன்றிலும் தலா 15 போட்டிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.

மேற்குறிப்பிட்ட உலகக் கிண்ண போட்டித் தொடர்கள் அனைத்திலும் இருந்து வேறுபாடும் உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலகக் கிண்ண போட்டித்தொடர் அமைந்தது. A,B என இரு பிரிவுகள்; ஒவ்வொரு பிரிவிலும் தலா ஆறு அணிகள் தத்தமக்குள் மோதி அவற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் அடுத்த சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலே சுற்றுப்போட்டியை விட்டு வெளியேறும் Knockout முறையில்தான் போட்டிகள் இடம்பெற்றன. கால் இறுதிப் போட்டிகள் இடம்பெற்ற ஒரே உலகக் கிண்ண போட்டித்தொடராக 1996 உலககிண்ண போட்டித்தொடர் மட்டும்தான் இதுவரை இருந்துள்ளது. ஆனால் இப்போது இரண்டாம் முறையாக கால் இறுதிப் போட்டிகள் இடம்பெறும் உலக கிண்ண போட்டித்தொடராக 2011 உலகக் கிண்ண போட்டித்தொடரும் இணையப்போகின்றது.


2011 உலக கோப்பை அட்டவணையின்படி A பிரிவில் அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, சிம்பாவே, கனடா, கென்யா என ஏழு அணிகளும்; B பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து என ஏழு அணிகளும் தத்தமது குழுக்களில் அனைத்து அணிகளுடனும் மோதிக்கொள்ளும். இவற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அடுத்த கட்டமாக காலிறுதிப் போட்டிக்கு (Knockout ) தகுதிபெறும்; அதன் பின்னர் அரையிறுதி, இறுதி போட்டிகள் இடம்பெறும்.

இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறும் 8 அணிகளும் SUPER 6 or SUPER 8 போட்டிகள் இடம்பெறாமையால் நேரடியாக காலிறுதி போட்டியில் ஆடுவதால்; முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் 8 அணிகளில் 4 அணிகள் அடுத்து இடம்பெறும் போட்டியில் (காலிறுதி) தோல்வியடைந்தாலே உலகக் கிண்ண கனவை மறக்க வேண்டியதுதான். தலா ஒரு போட்டியில் நான்கு முக்கிய அணிகள் தொடரைவிட்டு வெளியேறுவதால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணிப்பது கடினமான விடயம்.


முதல் சுற்றில் ஒரு குழுவில் 7 அணிகள் இருந்தாலும் அவற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்கு அணிகளை சுலபமாக கணிக்கலாம். A பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் B பிரிவிலிருந்து இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் அதிகமாக முதல் சுற்றிலிருந்து தெரிவாகும் அணிகளாக இருக்கும். பங்களாதேஸால் மட்டும்தான் தன குழுவில் உள்ள ஏதாவதொரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளது எனினும் அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவே.

ஆக மொத்தத்தில் காலிறுதியில் மேற்குறிப்பிட்ட 8 அணிகளும் யார்யாருடன் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்காகவும், ஆட்டத்தொடரின் நாயகனை தீர்மானிப்பதற்காகவும் தான் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 2007 உலகக் கிண்ணம் கொடுத்த பாடம்தானோ என்னமோ (இந்திய பாகிஸ்தான் வெளியேற்றம்) இந்த தடவை 4 or 2 குழுக்களில் இருந்து 6 or 8 அணிகளை தேர்வுசெய்து SUPER 6 or 8 போட்டிகள் நடாத்தப்படவில்லை. முதற் சுற்று ஆட்டங்களில் முக்கிய அணிகளில் இரண்டு வெளியேறினால் SUPER 6 or 8 போட்டிகள் சோபை இழந்துவிடும் என்பது icc யின் இந்த போட்டி அட்டவணை மாற்றத்திற்கான காரணமாக இருப்பினும் ஒரே போட்டியில் 4 முக்கிய அணிகள் வெளியேறுவதால் சிறப்பாக முதல் சுற்றில் ஆடிய ஒரு அணி அரையிறுதிக்கு முன்னரே ஒரு போட்டியில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.


1996 இல் லீக் போட்டிகள் அனைத்திலும்(5) வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அடுத்த போட்டியான காலிறுதிப் போட்டியில் (Knockout) லாராவின் one man show வினால் மேற்கிந்திய அணியிடம் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேறியது. அதே போன்ற நிலை இந்த 2011 உலகக் கிண்ண போட்டித்தொடளிலும் இடம்பெறலாம்!!. தமது குழுக்களில் முதல் இரு இடங்களுக்குள்ளும் வரும் என்று பலராலும் எதிர்வு கூறப்பட்ட இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா போன்ற அணிகள் (இவைதான் 2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் என்று பலரும் ஆரூடம் கூறும் முக்கிய அணிகள்) அடுத்த போட்டியில்; அதாவது காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளால் வீழ்த்தப்பட்டால் உலகக் கோப்பை கனவை மறக்க வேண்டியதுதான்.

காலிறுதிப் போட்டியில் முன்னணி அணிகளுக்கு அன்றைய நாள் நன்றாக அமையாவிட்டால் என்ன செய்ய முடியும்? one man show, சிறந்த துடுப்பாட்ட இணைப்பாட்டம், சிறப்பான team work என ஏதாவதொரு சிறப்புகாரணி பலம் குறைந்தவை என்று கூறப்படும் நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கைகொடுக்க; பலமான அணிகளாக கணிக்கப்படும் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கு அன்றைய நாள் சொதப்பலாக (அதாவது மோசமான துடுப்பாட்டம், மோசமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு, batting collapse, நடுவரின் தவறான தீர்ப்பு, run out போன்ற காரணிகள்) அமைந்தால் குறிப்பட்ட முன்னணி அணிகளது உலககிண்ண கனவு காலிறுதியிலேயே முடிவடைந்து விடும்.


உதாரணமாக சொல்வதானால் கிறிஸ் கெயில் கோர தாண்டவம் ஒன்று ஆடினால் எந்த எதிர் அணியினாலாவது தாக்குபிடிக்க முடியுமா? மேற்கிந்திய தீவுகளில் கெயில் தவிர போலாட்; இங்கிலாந்தின் பீட்டர்சன், ஸ்வான் (பந்துவீச்சு); நியூசிலாந்தின் டெய்லர், ரெய்டர், மக்கலம் விட்டோரி(பந்துவீச்சு); பாகிஸ்தானின் அப்ரிடி, ரசாக், அக்தர்(பந்துவீச்சு ) என போட்டியை தங்கள் அணிக்கு சார்பாக மாற்றக்கூடிய வீரர்களுக்கு அன்றையநாள் வாய்த்துபோனால் அவுஸ்திரேலியாவும் ஒன்றும் செய்ய முடியாது இந்தியாவும் ஒன்றும் செய்ய முடியாது. காலிறுதி, அரையிறுதி , இறுதி மூன்று Knockout கட்டங்களை தாண்டித்தான் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதால் எந்த பலமான அணியாக இருந்தாலும் ஒரு Knockout போட்டியில் மேலே குறிப்பிட்டதுபோல எதிரணியினர் சவாலை கொடுத்தால் கிண்ணக் கனவை அடுத்த உலகக் கிண்ணம் வரை ஒத்திவைக்க வேண்டியதுதான்.

இப்ப சொல்லுங்க, எந்த அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று எதிர்வு கூறமுடியுமா? கடந்த 3 உலகக் கிண்ண போட்டிகளிலாவது அரையிறுதிக்கு தேர்வாகும் என்று நம்பும் நான்கு அணிகளின் பெயரை குறிப்பிட்டு இவற்றில் ஏதாவதொன்று என்று கூறலாம், ஆனால் இந்தத் தடவை அதற்கும் சாத்தியமில்லை. கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எதுவென்பதை சித்திரை இரண்டாம் திகதிவரை மிகுந்த எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், ஒருவித பதட்டத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.




Tuesday, March 29, 2011

'பயங்கர ஜோக் பார்ட்டி'யா பாஸ்...?

சுவாரசியமான சில தேர்தல் கலாய்ப்புக்கள். கலாய்ப்புக்கள் என்பதற்காக கருத்துக்கள்...
ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் வாங்கினால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும்.
ஓட்டு போட்டதுக்காக தேர்தலுக்கு அப்புறமா கிரைண்டர் மிக்ஸி மட்டும் வாங்கிக்கலாமுங்களா அய்யா..?

சத்யமூர்த்தி பவனில் தங்கபாலு உருவபொம்மை எரிப்பு அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
என்னடா பொழுது சாய்ஞ்சிடுச்சே இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தோம்..


ஆள் பலம் பண பலத்தைக் காட்டி எங்களை மிரட்டுகிறார்கள் - நடிகர் கார்த்திக்
ஹே.. யாரப்பா அது பச்சப் புள்ளகளப்  போயி பயமுறுத்துறது...


எங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 1300 விண்ணப்பங்கள் வந்திருந்தன - நடிகர் கார்த்திக்
மொத்தமே நமக்கு 400 ஓட்டுதானே அண்ணே விழும்...


வடிவேலு என்னைப் பற்றி பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. மக்கள் என்னை அறிவார்கள் - விஜயகாந்த்
ஆமாங்க கேப்டன்.. யூடியூப்ல கூட அவரை விட உங்க காமெடிக்குத்தான் ஹிட்ஸ் அதிகம்


வாணி மஹாலில் எஸ்.வி.சேகரின் 'காதுல பூ' நாடகம்
வாட் எ டைமிங் சர்ஜி


எங்களை கூட்டணியில் இருந்து பிரித்து தனியாக நிற்க வைத்து அவர்கள் ஜெயித்துவிடலாம் என சூழ்ச்சி செய்தார்கள்
யாருங்க கேப்டன்... கட்சி ஆபிஸ் வாசல்ல அம்மா உருவபொம்மையை எரிச்ச நம்ம தொண்டர்களா...?


விஜயகாந்துக்கு மக்களிடத்தில் நடிக்க தெரியாது - பிரேமலதா
படத்துல மட்டும்...?


மனைவியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது - மாற்று வேட்பாளரான தங்கபாலு மனு ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்னு சொல்றாங்களே, அது இதுதானா தலைவா.. .என்னா ஒரு வில்லத்தனம்...?


கூட்டணியை மாற்றிக்கொண்டே இருக்கும் பா.ம.க.வுக்கு குரங்கு குணம் - விஜயகாந்த்
அது சரி... இப்போதான நாம மொத மரத்துல ஏறியிருக்கோம்....


மாணவர்களுக்கு பென்சில் பேனா வழங்கப்படும் - பி.ஜே.பி தேர்தல் அறிக்கை
பி.ஜே.பின்னா 'பயங்கர ஜோக் பார்ட்டி'யா பாஸ்...?


கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும் - தங்கபாலு
நம்ம கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கே படாத பாடு படனுமே தலைவரே....


விஜய்காந்தை தாக்கிப் பேசியதற்காக வடிவேலு மீது வழக்கு
ரொம்ப  உணர்ச்சி வசப்பட்டுட்டமோ..அவ்.வ்வவ்வ..? - வடிவேலு
நன்றி:'வலைமணை

நகரில் திடீர்த் தீ; கடைகள் நாசம் முனீஸ்வரன் வீதியில் அழிவு

யாழ். நகரின் பஸ் நிலையத்துக்கு எதிர்ப்புறமாகவுள்ள முனீஸ்வரன் வீதியில் நேற்றிரவு 7.20 மணியளவில் திடீரெனத் தீப்பற்றிக்கொண்டதில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின. இதில் பல லட்சம் ரூபா பெறுமதியான புடைவைகள் எரிந்து அழிந்தன என்று வியாபாரிகள் கூறினர்.
இராணுவத்தினரதும் மக்களதும் பெரும் பிரயத்தனத்தால் தீ ஏனைய தொடர்ச்சியாக உள்ள கடைகளுக்கும் பரவாது சுமார் ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   
தீ அணையும் வரை யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அங்கு தலைகாட்டவே இல்லை.
தீ விபத்து ஏற்பட்டவுடன் யாழ். மாநகரசபையின்  தீயணைப்புப் பிரிவைத் தொடர்புகொண்ட போது "" தீயணைப்பு வாகனம் இல்லை. அது திருத்த வேலைகளுக்காகச் சென்றுள்ளது. சாரதியும் இல்லை. மாற்று ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கின்றோம்'' என்று தெரிவிக்கப்பட்டதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கடைக்காரர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் மின் ஒழுக்கால் ஏற்பட்டது அல்ல; இது திட்டமிட்ட ஒரு அக்கிரமச் செயல் என்றார் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களில் ஒருவர்.
நேற்றைய தீ விபத்து சம்பவம் தொடர்காக மேலும் தெரியவருவதாவது:
கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது.
விரைவாக தீ பரவியதால் மூன்று கடைகள் எரிந்து நாசமாகின.
தீப்பிழம்புகள் வானைத் தொடுவது போன்று மேல் எழுந்தன. அவ்விடத்தை நெருங்கமுடியாதளவுக்கு அங்கு பெரும் தீச்சுவாலைகள் பரந்து விரிந்து அச்சமூட்டின.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர் பெரும் பிரயத்தனத்துடன் தீயை அணைக்கப் பாடுபட்டனர். அவர்களுடன்  பொதுமக்களும் கூடி  தீயை அணைத்தனர்.
அருகில்  உள்ள புல்லுக்குளம் மற்றும் கழிவு வாய்க்கால் என்பவற்றில் இருந்து கையால் அகப்பட்ட பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து வீசினர்.
உடனடியாக சுற்றுச் சூழலில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரும் தீயை அணைப்பதற்கு நீண்டநேரம் போராடினர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்களுடன் இணைந்து சளைக்காமல் நின்று ஒருவாறு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் எரிந்து அழிந்த கடை ஒன்றின் உரிமையாளர் அழுது புலம்பியவாறு இது மின் ஓழுக்கால் ஏற்பட்ட சம்பவம் அல்ல நாங்கள் கடையை மூடிச் செல்லும்போது  விளக்கும் கூட எரியவிடுவதில்லை. எனவே எவரோ திட்டமிட்டு இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்துள்ளனர்  என்றார்.
சம்பவ இடத்துக்கு யாழ். நகரப் பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அடிகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் ஆசிரியர் யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரான ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குப்பிளானைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது 28) என்ற இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற் காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.
பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.
அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.  

புதிய துணைவேந்தராக வசந்தி நேற்று நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். 
பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார்.
மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
வசந்தி அரசரட்ணம் : கல்வித்துறை வரலாறு 
1984 : விரிவுரையாளராக இணைவு
1990 : துறைத் தலைவர்
1996 : இணைப் பேராசிரியர்
1998 : பேராசிரியர்
2000-03 : முதலாவது பெண் மருத்துவ பீடாதிபதி
2007 : முதுநிலை பேராசிரியர்
2011: துணைவேந்தர்

உரிமைகளைப் பெறவே அரசுடன் பேச்சு அதை பலவீனமாகக் கருதுவது முட்டாள்தனம் கூட்டமைப்பை விமர்சிப்போருக்கு செல்வம் எம்.பி. சாட்டை

நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்களுடனும் ஏனைய பல்வேறு தரப்பினருடனும் தமிழ் மக்கள்  இழந்த அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதனை எமது அரசியல் பலவீனம் என்று கருதினால் அது ஓர் முட்டாள்தனமான அரசியல் சிந்தனை.
இப்படி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.           
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தால் அழிந்துபோன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க நாம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்ற தளத்தில் உறுதியாகவுள்ளொம். 
அதன் அடிப்படையிலேயே கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்(புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து போட்டியிட்டன.  நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 12 பிரதேச சபைகளைக் கைப்பற்றி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை தென்னிலங்கைக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களின் தாயக பூர்வீக நிலங்கள் நாளுக்கு நாள் அபகரிக்கப்படுகின்றன. சிங்கள, பௌத்தமய ஆதிக்கம் படிப்படியாக மேலோங்கி வருகின்றது. இது ஓர் ஆபத்தான \மிக்ஞை ஆகும். இது  ஆபத்தான விடயம் என்று தெரிந்தும் கூட அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல் தலைமைகள் வாய்மூடி மௌனிகளாகவே உள்ளனர். 
இதற்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன என்பதை  எமது மக்கள் நன்கு அறிவார்கள். கடந்தகாலத் தேர்தல்களில் எமது ஒற்றுமை சிதைக்கப்பட்டமை காரணமாக எமது மக்கள் இன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 
வடக்கு கிழக்கில் தமிழ்ப் பிரதசங்களில் அபிவிருத்தி, புனர்வாழ்வு என்பவை பூச்சியமாகவே உள்ளன. ஆனால் தேவையற்ற பகுதிகளில் தேவைக்கு அதிகமான அபிவிருத்தி நடவடிக்கைகள் பல்வேறு அமைச்சர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது மக்களின் அத்தியாவசிய அபிவிருத்திகள் குறித்து நாம் அரச தரப்பினரின் நேரடிக் கவனத்துக்குப் பல தடவைகள் கொண்டுவந்த போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டன. எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நலன்களை எமது மக்கள் பிரதிநிதிகள் கண்காணிப்பில் முன்னெடுக்க வேண்டும் என்பதையே சர்வதேச சமூகத்துக்கும் அரசுக்கும் உறுதியாகத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
 அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் சர்வதேச சமூகத்தின் கருத்துகளுக்கு முன்னுரிமை  அளிப்பது எமது கௌரவமான அரசியல் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
எனவே எந்த ஒரு சலுகைக்கும் அடிபணிந்து போகாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தமது அரசியல் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
இப்படி  செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.