நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்களுடனும் ஏனைய பல்வேறு தரப்பினருடனும் தமிழ் மக்கள் இழந்த அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதனை எமது அரசியல் பலவீனம் என்று கருதினால் அது ஓர் முட்டாள்தனமான அரசியல் சிந்தனை.
இப்படி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தால் அழிந்துபோன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க நாம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்ற தளத்தில் உறுதியாகவுள்ளொம்.
அதன் அடிப்படையிலேயே கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்(புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து போட்டியிட்டன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 12 பிரதேச சபைகளைக் கைப்பற்றி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை தென்னிலங்கைக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களின் தாயக பூர்வீக நிலங்கள் நாளுக்கு நாள் அபகரிக்கப்படுகின்றன. சிங்கள, பௌத்தமய ஆதிக்கம் படிப்படியாக மேலோங்கி வருகின்றது. இது ஓர் ஆபத்தான \மிக்ஞை ஆகும். இது ஆபத்தான விடயம் என்று தெரிந்தும் கூட அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல் தலைமைகள் வாய்மூடி மௌனிகளாகவே உள்ளனர்.
இதற்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். கடந்தகாலத் தேர்தல்களில் எமது ஒற்றுமை சிதைக்கப்பட்டமை காரணமாக எமது மக்கள் இன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் தமிழ்ப் பிரதசங்களில் அபிவிருத்தி, புனர்வாழ்வு என்பவை பூச்சியமாகவே உள்ளன. ஆனால் தேவையற்ற பகுதிகளில் தேவைக்கு அதிகமான அபிவிருத்தி நடவடிக்கைகள் பல்வேறு அமைச்சர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது மக்களின் அத்தியாவசிய அபிவிருத்திகள் குறித்து நாம் அரச தரப்பினரின் நேரடிக் கவனத்துக்குப் பல தடவைகள் கொண்டுவந்த போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டன. எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நலன்களை எமது மக்கள் பிரதிநிதிகள் கண்காணிப்பில் முன்னெடுக்க வேண்டும் என்பதையே சர்வதேச சமூகத்துக்கும் அரசுக்கும் உறுதியாகத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் சர்வதேச சமூகத்தின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பது எமது கௌரவமான அரசியல் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
எனவே எந்த ஒரு சலுகைக்கும் அடிபணிந்து போகாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தமது அரசியல் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
இப்படி செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment