யாழ். நகரின் பஸ் நிலையத்துக்கு எதிர்ப்புறமாகவுள்ள முனீஸ்வரன் வீதியில் நேற்றிரவு 7.20 மணியளவில் திடீரெனத் தீப்பற்றிக்கொண்டதில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின. இதில் பல லட்சம் ரூபா பெறுமதியான புடைவைகள் எரிந்து அழிந்தன என்று வியாபாரிகள் கூறினர்.
இராணுவத்தினரதும் மக்களதும் பெரும் பிரயத்தனத்தால் தீ ஏனைய தொடர்ச்சியாக உள்ள கடைகளுக்கும் பரவாது சுமார் ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ அணையும் வரை யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அங்கு தலைகாட்டவே இல்லை.
தீ விபத்து ஏற்பட்டவுடன் யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவைத் தொடர்புகொண்ட போது "" தீயணைப்பு வாகனம் இல்லை. அது திருத்த வேலைகளுக்காகச் சென்றுள்ளது. சாரதியும் இல்லை. மாற்று ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கின்றோம்'' என்று தெரிவிக்கப்பட்டதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கடைக்காரர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் மின் ஒழுக்கால் ஏற்பட்டது அல்ல; இது திட்டமிட்ட ஒரு அக்கிரமச் செயல் என்றார் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களில் ஒருவர்.
நேற்றைய தீ விபத்து சம்பவம் தொடர்காக மேலும் தெரியவருவதாவது:
கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது.
விரைவாக தீ பரவியதால் மூன்று கடைகள் எரிந்து நாசமாகின.
தீப்பிழம்புகள் வானைத் தொடுவது போன்று மேல் எழுந்தன. அவ்விடத்தை நெருங்கமுடியாதளவுக்கு அங்கு பெரும் தீச்சுவாலைகள் பரந்து விரிந்து அச்சமூட்டின.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர் பெரும் பிரயத்தனத்துடன் தீயை அணைக்கப் பாடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் கூடி தீயை அணைத்தனர்.
அருகில் உள்ள புல்லுக்குளம் மற்றும் கழிவு வாய்க்கால் என்பவற்றில் இருந்து கையால் அகப்பட்ட பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து வீசினர்.
உடனடியாக சுற்றுச் சூழலில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரும் தீயை அணைப்பதற்கு நீண்டநேரம் போராடினர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்களுடன் இணைந்து சளைக்காமல் நின்று ஒருவாறு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் எரிந்து அழிந்த கடை ஒன்றின் உரிமையாளர் அழுது புலம்பியவாறு இது மின் ஓழுக்கால் ஏற்பட்ட சம்பவம் அல்ல நாங்கள் கடையை மூடிச் செல்லும்போது விளக்கும் கூட எரியவிடுவதில்லை. எனவே எவரோ திட்டமிட்டு இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்துள்ளனர் என்றார்.
சம்பவ இடத்துக்கு யாழ். நகரப் பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment